துணிவா? வாரிசா? ம்ம்ஹூம்... சூடும் சொரணையும்!
- Sankar Ramiah
- Jan 22, 2023
- 1 min read
எத்தனையோ ஆண்டுகளாக என்னென்னமோ கூத்துகளை பல திரைப்பட வெளியீட்டின் போது நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இம்முறை கண்டது நாயக வழிபாட்டின் கோரமான உச்சம் என்றே கூற வேண்டும். ஒரு உயிரின் விலை கேவலம் ஒரு திரைப்படத்தின் FDFS டிக்கெட் விலைக்கு சமமென ஆகிவிட்டது. வியர்வையை சிந்தி, பாலை சிந்தி, குருதியை சிந்தி, இறுதியில் ஒரு உயிரையும் சிந்தி... நம் சந்ததிகள் சாதித்தது என்ன?
படித்திருந்தால் பண்பு தெரிந்திருக்கும் என்று எண்ணலாமென்றால் அதிலும் ஏமாற்றமே! நன்கு படித்து அமெரிக்கா சென்று கம்ப்யூட்டரில் குப்பை கொட்டும் வல்லுனர்கள் ஒரு தெலுங்கு படத்திற்கு பண்ண அட்டூழியத்தால் திரையரங்க நிர்வாகம் படத்தை பாதியில் நிறுத்தி அனைவரையும் வெளியே துரத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இதற்கெல்லாம் யார் காரணம்? அஜித்? விஜய்? சிரஞ்சீவி? பாலையா? நிச்சயம் இல்லை. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். நமக்குத் தான் சுயமரியாதை என்று ஒன்று உள்ளதென்பது மறந்துவிட்டது. இது முதல் காரணமல்ல... இது தான் ஒரே காரணம்.
பைக்கில் பறந்து சென்று எப்படி விழுந்து சாகலாமென வீடியோ போடும் ஒரு யூடியூபருக்காக கொத்து கொத்தாக கூடி நின்று காவல்துறையிடம் அடி வாங்கும் சந்ததியை தான் நாம் வளர்த்து விட்டிருக்கிறோம். தியேட்டர் சென்று படம் பார்... பிடித்திருந்தால் ஓரிரு முறை மீண்டும் பார்... YouTube வீடியோ பிடித்திருந்தால் பார், like செய், ஷேர் செய்... அதை தாண்டி செய்வதற்கு இதில் எதுவுமே இல்லை என்பதை நாம் நிச்சயம் உணர வேண்டும். ஒரு மட்டமான காரணத்திற்காக நடுத்தெருவில் நின்று அசிங்கமாக கூச்சலிட்டு குழப்பம் விளைவிப்பதென்பது ஒரு அபாயமான மனநிலை இல்லையா! நீ மண்ணில் இறங்கி பதிக்கும் கால் தடம் வரலாறாக வேண்டுமே தவிர, இப்படி விரயமாகக் கூடாது.
மேலும், நாயக வழிபாட்டின் மூலமாக பயனடைவது அந்த ஒரு நாயகர் மட்டுமே. நாம் மட்டுமல்ல... அவர்கள் சார்ந்துள்ள சினிமா துறையே இதனால் பாதிப்பை தான் அடைகிறது. படத்தின் பட்ஜெட்டில் பாதியை உங்கள் நாயகருக்கு கொடுத்து விடுவதால் படத்தின் தரம் குறைகிறது. இதற்கு நாம் உயிர்த் தியாகம் செய்து போற்றிய திரைப்படங்களும் விதிவிலக்கல்ல. சினிமாவை சினிமாவாக பார்த்து ரசிக்கும் அனைத்து ரசிகர்களும் இதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்வார்கள்.
இப்படி யாருக்கும், எதற்கும், தனக்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு செயலுக்காக தன்மானத்தையே தகனம் செய்வது எந்த வகையில் நியாயம்? இப்பொழுதெல்லாம் என் குழந்தைகள் சாதாரணமாக சினிமா பாட்டு பாடினால் கூட எனக்கு பயம் வருகிறது. பயம் கோபமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம்? இனியாவது விழித்துக் கொள்ளுமா நம் இளைய சமுதாயம்!?

Comments